கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கேழல்மூக்கன் மற்ற தவளைகளைப் போன்ற உடல் மற்றும் கால் அமைப்புகளை பெற்று இருந்தாலும் இதன் தலை மிகவும் சிறியதாகும். மேலும் இதன் வாய் மற்றும் மூக்குப் பகுதி மிகவும் கூர்மையானதாகும், (இது பன்றியின் மூக்குப் போல் தோன்றுவதால் "கேழல்மூக்கன்" என்ற பெயரை பெற்றுள்ளது. கேழல்=பன்றி). இத்தவளை பருவமுற்றதும் கருஞ்செவ்வூதா நிறத்தைப் பெறும். ஆணைவிடப் பெண் தவளை உருவளவில் பெரியதாகும். நடு அமெரிக்கப் பகுதியில் மட்டும் வாழும் மெக்சிக்கோவின் குழிபறிக்கும் தவளை (Rhinophrynus dorsalis) கேழல்மூக்கனைப் போன்ற தோற்றமும் வாழ்க்கைமுறையும் கொண்டுள்ளது.[1]
இத்தவளையை பற்றிய அறிவு அப்பகுதில் வாழும் பழங்குடி மக்களிடம் பல ஆண்டுகளாக இருந்துவந்தாலும், அறிவியல் உலகிற்கு திரு. எஸ். டி. பிஸூ மற்றும் பிரன்கி புஸ்யாட் என்பவர்களால் முதன்முதலில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன.[2] 2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது [3].
இத்தவளை வருடத்தின் பெரும்பாலான நேரத்தை நிலத்திற்கு அடியில் கழிக்கின்றது. ஒரு வருடத்தில் வெறும் இரண்டு வாரங்கள் மட்டும், பருவ மழை காலத்தில் இனப்பெருக்கத்திற்காக வெளியே வரும். நிலத்திற்கு அடியில் வாழும் பெரும்பாலான தவளையினங்கள் உணவு தேடுவதற்காக வெளியே தோன்றும், ஆனால் இத்தவளையின் உணவு, நிலத்திற்கு அடியில் வாழும் கரையான் போன்ற பூச்சிகள் ஆகும். நிலத்திற்கு அடியில், மண்ணுக்குள் வாழும் பூச்சிகளை இத்தவளை, தன் வாயில் அமைந்துள்ள வடிகால் போன்ற பிரத்தியோக அமைப்பின் மூலம் உட்கொள்ளும்.[4]
இத்தவளையின் இருசொற்பெயர்(scientific name) சமசுகிருதம் மற்றும் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது. சமசுகிருதத்தில் "நாசிகா" என்றால் மூக்கு என்றும், கிரேக்கத்தில் "பாட்டிராக்கஸ்" என்பது தவளையை குறிக்கும், இது இருசொற்பெயரில் பேரினத்தின் பெயர் (நாசிகாபட்ராகஸ்) ஆகும். மேலும் சிற்றினத்தின் பெயர் இத்தவளை காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் சமசுகிருத பெயரான "ஷஹியாதிரி" தழுவி "ஷஹியாதிரன்சிஸ்" என பெயரிடப்பட்டுள்ளது. இத்தவளையின் குடும்பத்தை சார்ந்த தவளைகள் சேசல்சு தீவுகளில் காணப்படுவதால், சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியா, சேசல்சு மற்றும் மடகாஸ்கர் தீவுகள் ஒன்றாக இருந்தபொழுது இத்தவளை தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கண்டப்பெயர்ச்சியினால் இந்நிலப்பகுதிகள் பிற்காலத்தில் பிளவுபட்டது.
கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.